#BREAKING இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது!
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டுள்ளார். 2023ல் லண்டனுக்கு பயணித்தபோது அரசின் பணத்தை சொந்த செலவுக்காக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் 2022 முதல் 2024 வரை இலங்கை அதிபராக பதவி வகித்தவர் ரணில் விக்கிரமசிங்கே. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிய போது அதிபரக பொறுப்பேற்றுக்கொண்ட அவர், கடந்த 2023 செப்டம்பரில் தனது மனைவியும் பேராசிரியருமான மைத்ரி விக்கிரமசிங்கவின் வொல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழக விழாவில் கலந்துகொள்ள, லண்டனுக்கு தனிப்பட்ட பயணமாக சென்றுள்ளார். அப்போது சுமார் 16.9 மில்லியன் ரூபாய் அரசு நிதியை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையிக் குற்ற புலனாய்வு துறை (சிஐடி) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

இதுதொடர்பான விசாணைக்காக கொழும்புவில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இன்று காலை ரணில் விக்கிரமசிங்கே ஆஜரானார். அப்போது, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார். இந்தப் பயணத்தில் 10 பேர் கொண்ட குழுவுடன் சென்றதாகவும், இதற்காக அரசுக்கு செலவு ஏற்பட்டதாகவும் சிஐடி தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பின்னர், ரணில் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. அத்துடன் இதுபோன்ற ஒரு வழக்கில் இலங்கையில் முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.


