இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸின் முடிசூட்டு விழா - அடுத்தாண்டு ஜூனில் நடைபெறுகிறது

 
Charles

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழாவானது அடுத்தாண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 8ம் தேதி உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத்.  ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் என்ற பெருமையும் பெற்றார்.
கடந்த மாதம் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற எளிய விழாவில், மன்னராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் மூன்றாம் சார்லஸ். இந்நிலையில், மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழாவானது அடுத்தாண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி லண்டனில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக்கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ராணி இரண்டாம் எலிசபெத் 1953 இல் முடிசூட்டப்பட்டபோது, 129 நாடுகளைச் சேர்ந்த 8,000 விருந்தினர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு பயணம் செய்தது குறிப்பிடதக்கது.