"போரிஸ் ஜான்சன் புழுகுகிறார்; எங்கனாலும் சத்தியம் செய்ய ரெடி” - முன்னாள் ஆலோசகர் ஓபன் டாக்!
பிரிட்டனில் கொரோனா வேகமாகப் பரவினாலும் அதை விட வேகமான போரிஸ் ஜான்சனுக்கு எதிரான அலை தான் மின்னல் வேகத்தில் பரவுகிறது. ஏனெனில் அவரது பிரதமர் பதவி அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதே அதற்குக் காரணம். குறிப்பாக மக்கள் உணர்வுகளோடு விளையாடி விட்டார். பிரிட்டன் இளவரசர் பிலிப் கடந்தாண்டு ஏப்ரல் 9ஆம் தேதி உயிரிழந்தார். 8 நாட்கள் துக்கம் அனுசரித்த பின் 18ஆம் தேதி உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா உச்சம் பெற்றிருந்த காலகட்டம் அது.

இதனால் மக்கள் வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டிய பிரிட்டன் இளவரசர் பிலிப் உடலோ, ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக இறுதிச்சடங்கை சரியாக நடத்த முடியவில்லை. அதேபோல பிலிப் உடலுடன் இரண்டாம் எலிசபெத் தனியாக அமர்ந்திருந்த காட்சி அந்நாட்டு மக்களின் மனதை உலுக்கியது. ஆனால் அது நடந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பின்னர் மே 20ஆம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா விதிமுறைகளை மீறி பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அது தான் அவரது பதவிக்கு உலை வைத்துள்ளது.
)
இளவரசரின் இறுதிச்சடங்குக்கு அனுமதி வழங்காத போரிஸ் ஜான்சன் இப்படி செய்தது நியாயமா என கேள்வியெழுந்துள்ளது. இதனை தக்க ஆதாரத்துடன் The Daily Telegraph என்ற செய்தி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு செய்தியாக வெளியிட்டது. இதுதான் அந்நாட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இளவரசர் பிலிப் மறைவுக்கு துக்கம் அனுசரிக்க முடியாமல் மக்கள் அனைவரும் முழு ஊரடங்கால் வீடுகளிலேயே முடங்கியிருந்த வேளையில், போரிஸ் ஜான்சனோ மது பார்ட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். அவரின் இந்தச் செயல் அந்நாட்டு மக்களை ஆவேசமாக்கியுள்ளது.
)
இதனை ஒப்புக்கொண்ட அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்திலேயே பகீரங்க மன்னிப்பு கேட்டார். அதாவது அரசு சார்ந்த நிகழ்ச்சி என்று நினைத்து அந்த பார்ட்டியில் கலந்துகொண்டதாகக் கூறினார். ஆனால் உண்மையில் அது தனிப்பட்ட ஒரு நபர் நடத்திய பார்ட்டி. இதை தெரியாமல் கலந்துகொண்டதாக போரிஸ் ஜான்சன் சொல்வது அப்பட்டமான பொய் என எதிர்க்கட்சி மட்டுமில்லாமல் அவர் கட்சிக்காரர்களே விமர்சிக்கின்றனர். தற்போது அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக பிரதமர் போரிஸ் ஜான்சனின் முன்னாள் ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

அவர், "தனிப்பட்ட நபர் நடத்திய நிகழ்ச்சி என போரிஸ் ஜான்சனுக்கு முன்னரே தெரியும். ஆனால் அதனை மறைத்து நாடாளுமன்றத்தில் பொய் சொல்லியிருக்கிறார். அரசு சார்ந்த நிகழ்ச்சி அல்ல அது. இதனை நான் எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்து சொல்வேன்” எனக் கூறியுள்ளார். இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்தே போரிஸ் ஜான்சனுக்கு எதிராக கலகக்குரல் எழுந்துள்ளது. இதனால் தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலகக் கூடும் என தெரிகிறது. அவர் ராஜினாமா செய்தால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


