கொலம்பியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்! - மக்கள் பீதி

 
earth

கொலம்பியா நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் இன்று அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கொலம்பியா நாட்டின் தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கி.மீ தொலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. இதனால் உயரமான கட்டிடங்களில் வசித்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

இந்த நிலையில், சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவானது. அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.