ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தை நாங்களும் கவனித்து வருகிறோம் - ஜெர்மனி கருத்து

 
Germany on rahul

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அமெரிக்காவை தொடர்ந்து ஜெர்மனியும் கருத்து தெரிவித்துள்ளது. 

2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறதது என ராகுல் காந்தி பேசியிருந்தார். மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது.  அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக  ராகுல்காந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து,  அதற்கு அனுமதி அளிக்கும் விதமாக  30 நாட்கள் அவகாசம் அளித்து  நீதிமன்றம் பினை வழங்கியிருந்தது. இதனிடையே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து அவர்கள்  தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்கிற நிலை உள்ளது. இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மக்களவை செயலகம் இந்த நடவடிக்கையை எடுத்தது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

rahul

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளும் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இதுபற்றி ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்தியாவின் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிக்கு எதிராக முதன்முறையாக விதிக்கப்பட்ட தீர்ப்பு பற்றிய விசயங்களை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம். அவரது, நாடாளுமன்ற எம்.பி. பதவி முடக்கம் பற்றியும் கவனம் கொண்டுள்ளோம். நாங்கள் அறிந்த வரை, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கூடிய ஒரு நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார் என தெரிவித்து உள்ளார். அதன்பின்னர், இத்தீர்ப்பு நிலையானதொன்றா? என்றும் அவரது பதவி முடக்கம், ஏதேனும் ஓர் அடிப்படையில் உள்ளதா? என்பது பற்றியும் தெளிவாக தெரிய வரும் என்று அவர் கூறியுள்ளார். இந்த விசயத்தில், நீதிமன்ற சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கொள்கைகள் இருக்க வேண்டும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது. இவ்வாறு கூறினார்.