இங்கிலாந்தில் இந்திய தேசிய கொடியை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் - இந்திய தூதரகம் பதிலடி

 
uk

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியையும் அவமதித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மிகப்பெரிய அளவிலான தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. 

இங்கிலாந்தில்ல் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் திடீரென கையில் காலிஸ்தான் கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் இந்திய தூதரகத்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இந்திய தூதரகத்தில் பறந்துகொண்டிருந்த இந்திய தேசிய கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்தன்னர்.


இங்கிலாந்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு தலைநகர் புதுடில்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தது.மேலும் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவும் வலியுறுத்தி சம்மன் அனுப்பப்பட்டது. இதேபோல் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது. இதனிடையே இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக அதிகாரி அலெக்ஸ் எல்லிஸ் தனது சமூகவலைதளத்தில் இந்திய தூதரகத்தின் மீதான அவமானகரமான செயல்களை கண்டிக்கிறேன். இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என பதிவிட்டு உள்ளார்.


இதனிடையே இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்த முயன்ற தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், மீண்டும் அந்த இந்திய தூதரகத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மிகப்பெரிய அளவிலான தேசிய கொடி பறக்கவிடப்பட்டது.