ஈரானின் 3 முக்கிய அணு உலைகள் தகர்ப்பு.. “பெரும் அழிவு ஏற்படும்” எச்சரிக்கும் அமெரிக்கா..!!
இஸ்ரேலுடன் கைகோர்த்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியிருப்பதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் பெரும் அழிவு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் தரப்பிலும் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இருதரப்பும் மாறி மாறி நடத்தும் கடுமையான தாக்குதல்களால், இருப்பக்கத்திலுலே ஏராளமான உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர் தாக்குதலால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துவரும் அமெரிக்கா தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஈரானில் ஃபார்டவுவ் , நடான்ஸ் மற்றும் இஸ்பாஹான் ஆகிய மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய மூன்று அணுசக்தி தளங்களும் தகர்க்கப்பட்டதாகவும், ஒரு தளம் மீது முழுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். உலகின் முதன்மையான பயங்கரவாத ஆதரவாளரின் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதே எங்களின் நோக்கமாக இருந்தது என்றும், இன்று நடைபெற்ற தாக்குதல்கள் ஒரு பிரமிக்கத்தக்க ராணுவ வெற்றி என நான் உலகிற்கு தெரிவிக்கிறேன் என்றும் அதிபர் அறிவித்தார். ஈரான் மீதான தாக்குதல் வெற்றி என்று தெரிவித்துள்ள ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மத்திய கிழக்கில் அச்சுறுத்தலாக உள்ளஈரான் அமைதிக்கு திரும்பாவிட்டால் எஞ்சி உள்ள இலக்குகளை அழிப்போம் என்றும், அவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால் எதிர்காலத்தில் தாக்குதல் மிகப்பெரிய அளவில் இருக்கும் ; பெரும் அழிவு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார் ட்ரம்ப். 40 ஆண்டுகளாக அமெரிக்காவை அழிப்போம்; இஸ்ரேலை அழிப்போம் என ஈரான் மிரட்டி வந்தது. ஆயுதங்கள் மூலம் அவர்கள் நமது மக்களை கொன்றுள்ளனர் என்றும் கூறினார். தற்போது ஈரான் வான்வழி தளத்திலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி விட்டதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


