காசாவில் உதவிக்காக காத்திருந்த 1,760 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்..!
காசாவில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த 1,760 பேரை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நாள்தோறும் பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் எவ்வித நிவாரண பொருட்களும் அங்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து கொடிய துயரத்தோடு, உணவின்றி, உடைகளின்றி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படியிருந்தும் நாள்தோறும் அந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் பயங்கர ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.
காசாவில் நிவாரண முகாம்களாக செயல்பட்ட கட்டடங்கள், மருத்துவ முகாம்கள், உதவிப்பொருட்களுக்காக காத்திருக்கும் இடங்கள் என பொதுமக்கள் உதவி தேடி வரும் இடங்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஒருபக்கம் என்றால், பசியிலும் பட்டினியிலும் வாடி பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் காசாவில் கடந்த மே மாத இறுதியில் இருந்து உணவு மற்றும் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐ.நா அறிக்கையின் படி, “மே.27 முதல் ஆக.13 வரை உதவி கோரும்போது குறைந்தது 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும், 994 பேர் காசா மனிதாபிமான அறக்கட்டளை தளங்களுக்கு அருகிலும், 766 பேர் விநியோக வாகனங்களின் பாதைகளிலும் கொல்லப்பட்டனர். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ( வெள்ளிக்கிழமை) இஸ்ரேலிய பீரங்கி தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாகவும், இவர்களில் 12 பேர் உதவிக்காக காத்திருந்தவர்கள் என்றும் காசா சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே காசாவில் பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளதாகவும், இஸ்ரேலால் கொன்று குவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 238ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


