"அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை மனமாற ஏற்கிறேன்"- கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 295 மாகாணங்களில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், 226 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். 2016ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று முதன் முறையாக அதிபரான டிரம்ப் அதன்பிறகு 2020ல் தோல்வியடைந்தார். இந்த முறை 2024ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று 2வது முறையாக அதிபராகி ‘கம்பேக்’ கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், “வெற்றி பெற்ற ட்ரம்பை தொடர்புக் கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் எனது போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன். அமைதியான முறையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுமாறு டிரம்ப்பிடம் கேட்டுக்கொள்கிறேன். பெண்களின் உரிமைகளுக்காகவும, துப்பாக்கி வன்முறைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன். சில சமயங்களில் நம் வெற்றி சற்று தள்ளிப்போகும். அதற்காக நாம் வெற்றி பெற மாட்டோம் என்று அர்த்தம் இல்லை” என்றார்.