அடுத்தகட்ட பணிநீக்கத்திற்கு தயாரான மெட்டா! - இந்த முறை எத்தனை பேர் தெரியுமா?

 
Meta

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் இரண்டாவது கட்ட பணிநீக்க நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா பரவலுக்கு பிந்தைய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக டிவிட்டர், மெட்டா, அமேசான் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டன. இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் என பல முன்னணி சமுகவலைத்தளத்தின்  தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒட்டு மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் ஆகும். இதனிடையே மார்ச் மாத தொடக்கத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் அனைத்து உயர் அதிகாரிகளிடம்  இரண்டாவது கட்டமாக பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் லிஸ்ட் தயாரிக்க கூறியிருந்தார். சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.

meta

இந்நிலையில், வேலை நீக்கம் பற்றி அறிவிப்புகளை வெளியிட தயாராக இருக்கும்படி நிறுவனத்தில் உள்ள மேலாளர்களுக்கு மெமோ வழியே தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.  மெட்டா நிறுவனம் இன்று 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2வது பணிநீக்க சுற்றை layoffs Wednesday என சித்தரிக்கும் வெளிநாட்டு பத்திரிக்கைள், இந்த சுற்றில் குறைந்தது 4000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளன. மெட்டாவின் 2வது பணிநீக்க சுற்றில் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் இந்தியா, பிரிட்டன் என உலகின் முக்கியமான சந்தைகள் அனைத்திலும் பணிநீக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இதன் தாக்கம் இருக்கும். 

Meta

2வது சுற்றில் பணிநீக்கம் செய்யப்படும் 4000 ஊழியர்களுக்கான அறிவிப்பு அமெரிக்க நேரப்படி காலை 3- 5 மணிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை இல்லாவிட்டால் இந்த வார இறுதிக்குள் கட்டாயம் பணிநீக்கம் அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த பணிநீக்க அறிவிப்புகள் அடுத்த வாரத்திற்குள் முடிக்கப்படவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் அடுத்தகட்ட பணி நீக்கம் மே மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. கீழ் மட்ட ஊழியர்கள் இந்த சுற்றில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது.