மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம்- கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பலி

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது.
மியான்மரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க நிலவியல் ஆய்வு மைய கூற்றுப்படி, இது 7.7 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம். மத்திய மியான்மரில் உள்ள சகாயிங் நகரின் வடமேற்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும் பகுதிகள் பேரழிவை சந்தித்துள்ளன. இதன் தாக்கம் சீனா, தாய்லாந்திலும் உணரப்பட்டது. பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,002 பேர் இறந்துள்ளதாகவும், 2,376 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேபோல் தாய்லாந்தின் பாங்காக்கிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது. கட்டடத்தின் மேற்பகுதியில் இருக்கும் நீச்சல் குளத்தில் இருந்து நீர் அருவி போல கீழே கொட்டியது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என மீட்புக்குழுவினர் கூறுகின்றனர். இந்தியாவிலிருந்து 15 டன் நிவாரணப் பொருட்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு அனுப்பப்பட்டுள்ளன.