சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 10க்கும் மேற்பட்டோர் காயம்!

 
earthquake

சீனாவில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில நாட்களாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதேபோல் இந்தியாவிலும், அவ்வபோது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், நமது அண்டை நாடான சீனாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவின் ஷாண்டாக் மாகாணத்தில் உள்ள டெசா நகரில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக சீன தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சரியாக அதிகாலை 2.33 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெசா நகரில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சில பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதேபோல், ஜம்மு- காஷ்மீரில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சரியாக காலை 8.36 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 129 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.