ஆட்குறைப்பில் இறங்கும் வால்ட் டிஸ்னி நிறுவனம்.. 7,000 பேரை நீக்க முடிவு..
பிரபல பொழுது போக்கு மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி, தனது ஊழியர்களில் 7000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ரஷ்யா - உக்கரைன் போரின் தாக்கத்தால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக செலவீனங்களை குறைக்கும் விதமாக பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடப்பட்டுள்ளன. முன்னதாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டகிராம் நிறுவனமான மெட்டா, அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டன. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிரபல வீடியோ கான்பரன்ஸிங் நிறுவனமான ஸூம் (Zoom) 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி ஆட்குறைப்பில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள தங்களது நிறுவன ஊழியர்களில் சுமார் 7000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக டிஸ்னி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் மூன்று விழுக்காடு தான். ஏனெனில் உலகம் முழுவதும் வால்ட் நிறுவனத்தில் 2.2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த 2020ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி நிறுவனம் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


