'நேட்டோவுடன் இணையும் ஆர்வம் குறைந்துவிட்டது.. கெஞ்சி யாசகம் பெறும் அதிபர் நானில்லை’ - அதிபர் ஜெலன்ஸ்கி

 
Ukraine president zelensky

நேட்டோ உக்ரைனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும்,  மண்டியிட்டு யாசகம் பெரும் அதொபராக தான் இருக்கப்போவதில்லை என்றும்  உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி  கூறியுள்ளார்.

உக்ரைன் மீது  ரஷ்யா கடந்த  பிப்ரவரி 24 தேதி அதிகாரப்பூர்வ போரை தொடங்கியது.  14வது நாளாக போர் தொடர்ந்து  நடைபெற்று கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் போர் சூழலால்  புலம்பெயர்ந்து அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறியுள்ளனர். இரு நாடுகளும்   போரை நிறுத்துவது தொடர்பாக 2 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவொரு முன்னேற்றமும் எட்டப்படாத  நிலையில், மூன்றாவதாக பெலாரசில் நடந்த பேச்சுவார்த்தையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக  ரஷ்ய பேச்சுவார்தைக்குழு தலைவர் தெரிவித்திருந்தார்.  இருப்பினும்  முடிவுக்கு வந்தபாடில்லை. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை  விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ukraine

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய உள்ளதே போருக்கு காராணமாக கூறப்பட்டு வந்தது.  இந்த நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, "நேட்டோ உக்ரைனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை" என்றும்,  இதற்காக அழுத்தம் கொடுக்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.  தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர் இவ்வாறு  கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,  உக்ரைனை நேட்டோவில் இணைத்துக்கொள்ள அந்த அமைப்பில் உள்ள நாடுகள் ஆர்வம் காட்டவில்லை எனத் தோன்றுகிறது என்றும்,  நேட்டோவில் உக்ரைனை இணைப்பது குறித்த விவகாரத்தில் எனக்கு எப்போதோ ஆர்வம் குறைந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.

Ukraine President zelensky

மேலும் உக்ரைனை சேர்த்துக் கொள்ள நேட்டோ தயாராக இல்லை என தெரிந்த பிறகு அந்த அமைப்பில் இணையும் விருப்பத்தை நான்  கைவிட்டுவிட்டதாகவும்,  நேட்டோ எங்களை ஏற்கத் தயாராக இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம் என்றும்,   சர்ச்சைக்குரிய விவகாரங்கள், ரஷ்யாவுடானான மோதல் ஆகியவைக்கு நேட்டோ கூட்டணி பயப்படுவதாகவும் கூறினார்.  மண்டியிட்டு யாசகம் பெறும்   அதிபராக இருக்க நான் விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர்,  எனக்கு வாக்களித்த மக்கள் சரணடைய தயாரக இல்லை என்றும் தெரிவித்தார்.

உக்ரைனின் ஓர் அங்கமாக இருந்த கிரீமியா மற்றும் டான்பாசில் எதிர்காலம் குறித்து ரஷ்யாவுடன் விவாதிப்போம் என்றும், இதுகுறித்த பேச்சுவார்த்தையில் புதின் நேரடியாக பங்கேற்க முன்வர வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.  போரை முடிவுக்கு  கொண்டுவருவதாக இருநாடுகளும் அறிவிக்காத நிலையில் ஜெலன்ஸ்கியின் சமாதானமான  பேச்சு  சர்வதேச அளவில்  கவனம் பெற்றிருக்கிறது!