இனி நாங்கள் திவாலான நாடு அல்ல - அதிபர் ரணில் விக்ரமசிங்கே..

 
Ranil Wickremesinghe - ரணில் விக்ரமசிங்கே

பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு சர்வதேச நிதியமான IMF பெருந்தொகையை வழங்க முன் வந்துள்ளதால் இனி தங்கள் நாடு திவாலான நாடு அல்ல என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.  

தவறான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால்  மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை அரசால் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைக்க முடியாமல் போனது.  இதனால் கடந்த ஆண்டு இலங்கை திவாலானதை அடுத்து,   அங்கு மக்கள் புரட்சி வெடித்தது.  அத்தியாவசிய  பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது.  இதனையடுத்து  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,  பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோர்  பதவி விலகினர்.   அதன் பிறகு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இலங்கை போராட்டம்

அதன் பின்னரும் இலங்கை அரசால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர முடியவில்லை.  பொருளாதார ரீதியாகவும்,  அரசியல் ரீதியாகவும் தள்ளாடிவரும் இலங்கைக்கு சர்வதேச நிதியமான IMF, 93 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய அதிபர் ரனில் விக்ரமசிங்கே,  இனி இலங்கை திவால் ஆன நாடு அல்ல என்று அறிவித்துள்ளார்.   இனி  தங்களால்  அன்றாட நடைமுறையை மீண்டும் தொடங்க முடியும் என்றும்,   அந்நிய செலாவணி சீராக தொடங்கி இருப்பதால் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலக்குவோம் என்றும் கூறினார்.  சுற்றுலா பயணிகளுக்கான அத்தியாவசிய பொருட்கள்,  மருந்து  பொருட்கள் வாங்குவதே  முதல் பணியாக இருக்கும் என்றும் கூறினார்.