கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. முற்றும் ட்ரம்ப் - எலான் மஸ்க் இடையேயான போர்..

 
Donald Trump - ELon Musk Donald Trump - ELon Musk

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர்களுக்கு நிதி கொடுத்து அரசுக்கு எதிராக செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எலான் மஸ்கிற்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு முன்பு அதிபர் ட்ரம்ப்பும், தொழிலதிபர் எலான் மஸ்க்கும் நெருங்கிய நட்புடன் இருந்து வந்தனர். கிட்டத்தட்ட  இணைந்த கைகல் போன்று செயல்பட்டு வந்தனர். ஆனால் தற்போது இருவரது நட்பிலும் பெரிய விரிசல் விழுந்துள்ளது.  அரசின் செலவீன  சீர்திருத்தங்களுக்கான டி.ஓ.ஜி அமைப்பிலிருந்து  மஸ்க் அதிரடியாக வெளியேறினார். தன்னுடைய ஆதரவு இல்லை என்றால் ட்ரம்ப்பால் வெற்றி பெற்றிருக்க முடியாது என தெரிவித்துள்ள அவர்,  பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெஃப்ரி ஐன்ஸ்டினுடன் ட்ரம்பிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.  மேலும் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்துவிட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்-ஐ அதிபராக்க ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

Image

அதிபர் தேர்தலுக்காக பணத்தை வாரிவழங்கிய எலான் மஸ்க், தற்போது அதிபருக்கு எதிராக திரும்பியிருபது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இருவருக்கும் இடையேயான வார்த்தைப்போர் முற்றி வரும் நிலையில்,  எலான் மஸ்க் நிறுவனங்களுக்கான அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்வேன் என அதிபர் ட்ரம்ப்  மிரட்டல் விடுத்திருக்கிறார். அதாவது எலான் மஸ்கின் நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களை ரத்து செய்யுமாறு இதுவரை உத்தரவிட்டதில்லை எனவும்,  ஆனால் இனிமேல் அதுபோல் நடக்க வாய்ப்புள்ளதாகவும்  ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ட்ரம்ப் மீதான பாலியல் புகார் தொடர்பான தனது எக்ஸ் தள பதிவை எலான் மஸ்க்  நேற்று நீக்கினார். 

அதேநேரம்  எலான் மஸ்க்குடன்  சமாதானம் என்கிற பேச்சுக்கே இனி வாய்ப்பில்லை என்றும், மஸ்குடன் பேசுவதைவிட தனக்கு முக்கியமான பல வேலைகள் இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அதிபர் மாளிகையை மஸ்க் அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும் கடந்த மாதம் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட ‘பியூட்டிஃபுல் பட்ஜெட் ’ மசோதாவுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.  இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க ஜனநாயக கட்சிக்கு செனட் உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க எலான் மாஸ்க் முயற்சித்தால்,  கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.